கல்வராயன்மலையில், அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது - போலீசார் நடவடிக்கை


கல்வராயன்மலையில், அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2019 11:00 PM GMT (Updated: 15 March 2019 6:05 PM GMT)

கல்வராயன்மலையில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம்,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 10-ந்தேதி அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நரிக்குறவர்கள் என மொத்தம் 367 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் தேர்தல் விதிமுறைப்படி துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 359 பேர் தங்களது துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 8 பேரிடம் ஓரிரு நாட்களுக்குள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்ட போலீசார் மூலமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்வராயன்மலை கிராமங்களில் சிலர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கரியாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள தாழ்தேவனூர்-மேல்தாவனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாட்டுத் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்கள். இதனால் உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச் சென்ற போது 2 பேர் துப்பாக்கிகளுடன் பிடிபட்டனர். மற்ற 2 பேர் துப்பாக்கிகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தாழ் தேவனூரை சேர்ந்த முத்துசாமி மகன் இளையராஜா(வயது 27), குள்ளன்(59) என்பதும், தப்பி ஓடியவர்கள் அதேகிராமத்தை சேர்ந்த செல்வம், அழகேசன் என்பதும் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இளைராஜா, குள்ளன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தப்பி ஓடிய 2 பேர் கீழே போட்டு சென்ற 4 நாட்டுத் துப்பாக்கிகள் என மொத்தம் 8 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய செல்வம், அழகேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த கல்வராயன்மலை தொரடிப்பட்டை சேர்ந்த பொன்னுசாமி என்பரையும் கரியாலூர் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார்.

Next Story