பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2019 4:15 AM IST (Updated: 16 March 2019 10:12 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி,

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் நேற்று கல்லூரியின் உள்பகுதியில் வாசல் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொள்ளாச்சி சம்பவத்தை அரசியலாக்குவதை தவிர்த்து, அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, அவர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி அங்கு வந்து மாணவிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், வேடசந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஷ்ணுவர்தன், ஒன்றிய தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலாஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் துரைக் கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இளம்பெண்கள் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story