தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து


தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 5:37 PM GMT)

தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு உருவான புகையால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

அடிக்கடி குப்பைகள் தீப்பிடித்து எரிகிறது. யாராவது தீ வைத்து கொளுத்துகிறார்களா? அல்லது எப்படி தீ விபத்து ஏற்படுகிறது? என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.


இந்தநிலையில் நேற்று மதியம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் ஜெபமாலைபுரம், சீனிவாசபுரம், மேலவெளி ஆகிய பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக யாராவது திட்டமிட்டு குப்பைகளை கொளுத்தி விடுகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்பு வீரர்களும் இந்த தீயை அணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

Next Story