திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகள் பறிமுதல்


திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 6:46 PM GMT)

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைக்கு எடுத்து வந்த 1,008 பித்தளை செம்புகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி,

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-கரூர் சாலை குடமுருட்டி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை திருச்சி பறக்கும் படை அதிகாரிகள், தனி தாசில்தார் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த காரில், கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் மனைவி, கார் டிரைவருடன் வந்தார். காரில் 1,008 பித்தளை செம்புகள், 500-க்கும் மேற்பட்ட சங்குகள் மற்றும் பூஜைக்கான பூக்கள் இருந்தது. அதற்கான ஆவணம் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

காரில் பித்தளை செம்புகள் மற்றும் சங்குகள் எதற்காக எடுத்து வரப்பட்டது என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக செம்புகள் மற்றும் சங்குகளை கோவையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பெற்று வந்ததாக கூறினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேல் உள்ள பொருட்களுக்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும் எனவும், 1,008 செம்புகள், சங்குகள் மற்றும் பூஜைக்காக எடுத்து வந்த பூக்களுக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில், டாக்டரின் மனைவியிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முகவேலனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். தாசில்தார் அதனை பார்வையிட்டு ‘சீல்’ வைத்தார். பின்னர் அப்பொருட்கள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story
  • chat