தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: சட்டத்துறையில் பணியாற்ற பெண்கள் அதிகமாக வரவேண்டும் நீதிபதி பேச்சு


தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: சட்டத்துறையில் பணியாற்ற பெண்கள் அதிகமாக வரவேண்டும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 17 March 2019 4:15 AM IST (Updated: 17 March 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் சட்டத்துறையில் சேவையுடன் பணியாற்ற அதிகமாக வர வேண்டும் என்று தேசிய சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில்ரமானி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி நவலூர்குட்டப்பட்டில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைபி.ஏ. எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம். எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக அரங்கில் நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுமான வி.கே.தஹில்ரமானி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சட்ட கல்வியை தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் மேம்படுத்தும் வகையில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதற்கு யு.ஜி.சி. அங்கீகாரம் வழங்கி உள்ளது. பல்வேறு நிதி நல்கை குழுக்கள் மூலம் நிதிகள், மானியங்கள் பெற்று கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற படிப்பை மட்டும் தேர்வு செய்து வந்த நிலையில் தற்போது சட்ட படிப்பிற்கு மாணவ-மாணவிகள் அதிகம் முக்கியவத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதில் மாணவிகள் அதிக அளவில் படிப்பது பெருமைக்குரியதாகும்.

மாணவ-மாணவிகள் சமூகத்தில் மாற்றத்திற்கான முகவர்களாக இருக்க வேண்டும். சமுதாய பொறுப்பும் மாணவர்களிடம் இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகளும், 2 பெண் நீதிபதிகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளாகவும் உள்ளனர். நாட்டில் 670 நீதிபதிகளில் 73 பேர் பெண் நீதிபதிகளாக உள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் 10 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். பட்டம் பெற்றவர்களில் மாணவிகள் அதிகம் பேர் இருப்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவிகள் உயர் கல்வி பயின்று நீதிபதி பணியிடங்களுக்கு அதிக அளவில் வர வேண்டும். பெண்கள் சட்ட துறையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற அதிகம் வர வேண்டும். இளம் வழக்கறிஞர்கள், சட்ட மாணவ-மாணவிகள் குடிமக்களின் உரிமைகள், கடமைகள், சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 2013-2018-ம் ஆண்டில் பி.ஏ. எல்.எல்.பி. படித்து முடித்த 54 பேர் பட்டம் பெற்றனர். இதில் நேரிடையாக ஒட்டு மொத்தமாக தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தது, மாணவிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது, உரிமையியல் நடைமுறை விதி சட்டம் பற்றிய படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் இடம் பிடித்தது என்ற வகையில் 3 தங்க பதக்கங்களை மாணவி சத்ய பார்வதி பெற்றார். மேலும் தர வரிசையில் இடம் பிடித்தவர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தங்க பதக்கங்களை வி.கே.தஹில்ரமானி வழங்கினார். பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் பொறுப்பாளர் அமிர்தலிங்கம், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் சூரியநாராயணன், மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கமலா சங்கரன் வரவேற்று பேசினார்.

Next Story