பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம்: அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ- மாணவிகள் 2,077 பேர் மீது வழக்குப்பதிவு
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கோவை மாவட்டம் முழுவதும் 2,077 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர், மாதர் சங்கத்தினர், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாலக்காடு ரோடு, கோவை ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி மகாலிங்கம், ம.தி.மு.க.வை சேர்ந்த துரை, அனைத்திந்திய மாதர்சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருட்டிணன், மக்கள் ஜனநாயக கட்சி முஸ்தபா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சூர்யா, திராவிடர் கழகம் வெள்ளியங்கிரி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் பாரதி மற்றும் 350 பெண்கள் உள்பட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143 சட்ட விரோதமாக கூடுதல், 153 கலவரத்தை தூண்டும் விதமாக நடந்து கொள்ளுதல், 341 தடுத்து நிறுத்தி இடையூறு ஏற்படுத்துதல், 35 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் சக்திவேல், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் 4 பெண்கள் உள்பட 75 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை அரசு சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கோவை மருதமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் 150 பேர் மீது வடவள்ளி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் போராட்டம் நடத்தியது தொடர்பாக 70 பெண்கள் உள்பட 200 பேர் மீது 2 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுதொடர்பாக 417 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் குனியமுத்தூர் ஆத்துபாலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுதொடர்பாக பெண்கள் உள்பட 235 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அரசு கலை கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,077 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story