உரிய ஆவணம் இல்லாததால் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்


உரிய ஆவணம் இல்லாததால் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 7:07 PM GMT)

வியாபாரி உள்பட 2 பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.2½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்,

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோட்டில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படையினரான ஆலத்தூர் துணை தாசில்தார் பழனி செல்வன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற ஒரு காரை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரம்பலூர் வடக்கு மாதவியை சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 33) என்பது தெரியவந்தது. அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அந்த பணத்தை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.

இதே போல் நேற்று அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ கோபால், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்தை நோக்கி சென்ற சரக்கு வாகனத்தில் வந்த வியாபாரியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 600-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறி முதல் செய்து அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அந்த பணம் சீல் வைக்கப்பட்டு, அரியலூர் மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. பெரியசாமி, செல்வகுமார் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக 2 பேரிடம் மொத்தம் ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 600 தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story