புகார் கூறிய மாணவி பெயரை வெளியிட்டதால் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை பாய்கிறது


புகார் கூறிய மாணவி பெயரை வெளியிட்டதால் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை பாய்கிறது
x
தினத்தந்தி 17 March 2019 4:45 AM IST (Updated: 17 March 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் புகார் கூறிய மாணவியின் பெயரை வெளியிட்டதால் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை,

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் ‘பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த கல்லூரி மாணவி தொடர்பான விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு விசாணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அதிகாரியின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளி மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மன நல ஆலோசனை வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி இருந்தனர்.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இட மாற்றம் செய்யப்படுவார் என்று உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாண்டியராஜன் இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய போது சாமளாபுரத்தில் மதுகடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கி இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயர் வெளியிட்ட சர்ச்சையிலும் சிக்கி விசாரணைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கோவை மாவட்ட அனைத்து வக்கீல்கள் சார்பில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் பாண்டியராஜன், இதற்கு முன் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது, ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். காவல்துறையில் பெண்களை ஆண் போலீசார் எவ்விதத்திலும் கையாளக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. அதை அவர் பின்பற்றவில்லை. இந்தநிலையில் பொள்ளாச்சி வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருந்தபோதே விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வழக்கில், அரசியல்வாதிகளுக்கு சம்பந்தம் இல்லை என்று பேட்டி அளித்தார். அவர் குற்ற செயலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை காப்பாற்ற முயற்சி செய்வார். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை அவர் வெளியிட்டுள்ளார். போலீஸ் சூப்பிரண்டு உள்நோக்கத்துடன் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணை நடத்தினாலும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய உள்ளூர் போலீசார், போலீஸ் சூப்பிரண்டின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வாய்ப்பு இல்லை. எனவே கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் வக்கீல்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story