கரூரில் கம்பீரமாக காட்சியளிக்கும் தலைவர்களின் சிலைகள் தேர்தல் விதியில் மாற்றமா? என அரசியல் கட்சியினர் குழப்பம்


கரூரில் கம்பீரமாக காட்சியளிக்கும் தலைவர்களின் சிலைகள் தேர்தல் விதியில் மாற்றமா? என அரசியல் கட்சியினர் குழப்பம்
x
தினத்தந்தி 16 March 2019 10:45 PM GMT (Updated: 16 March 2019 7:40 PM GMT)

மூடப்பட்ட சாக்குப்பைகள் அகற்றப்பட்டதால் கரூரில் தலைவர்களின் சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. இதனால் தேர்தல் விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக சுவர் விளம்பரங்கள் அழிப்பு, கட்சி-அமைப்பு சார்ந்த விளம்பர பதாகைகள், போஸ்டர்கள் அகற்றம், பொது இடங்களில் இருந்த கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானாவிலுள்ள அண்ணா சிலை, அதன் அருகே உள்ள காமராஜர் சிலை, வெங்கமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர்-அண்ணா சிலை, கரூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை உள்ளிட்ட சிலைகள் சாக்கு பைகள் போட்டு மூடப்பட்டு கயிறு வைத்து கட்டப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று கரூர் நகரில் உள்ள அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சிலைகளில் மூடப்பட்டு இருந்த சாக்கு பைகள் அகற்றப்பட்டு இருந்தது. இதனால் தலைவர்களின் சிலைகள் வழக்கம்போல் கம்பீரமாக காட்சி யளிக்கின்றன. எனினும் சிலைகளுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் இருந்த கட்சி சார்ந்த குறிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை சுற்றி கட்சி சார்புடைய எவ்வித தகவலும் தெரியாதபடி மறைத்துள்ளனர். இதனால் தேர்தல் விதியில் மாற்றம் ஏதும் செய்துள்ளனரா? என அரசியல் கட்சியினருக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக கரூர் நகராட்சி அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கோர்ட்டு உத்தரவிட்டதை சுட்டி காட்டி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியதன் பேரில் இத்தகைய நடவடிக்கையினை எடுத்துள்ள தாகவும் மற்றபடி தங்களுக்கு வேறெதுவும் தெரியாது எனவும் பதில் அளித்தார். கரூர் நகரில் மூடப்பட்ட தலைவர்கள் சிலையை, மீண்டும் பழையபடியே வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளதால் கரூர் நகரில் உள்ள தலைவர்கள் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story