மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்யவேண்டும் பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் வலியுறுத்தல் + "||" + Disabilities 100 percent to vote Training meeting Emphasis collector Kathiravan

மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்யவேண்டும் பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்யவேண்டும் பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்று பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுடன் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்களும் தொகுதி வாரியாக கண்காணிப்பு குழுவில் உள்ளனர். குழுவில் உள்ள சிறப்பு ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகள் உள்ளனரா? என்று வீடு வீடாக பார்த்து விவரங்கள் சேகரிக்க வேண்டும். கண்டறியப்படும் மாற்றுத்திறனாளிகள் எவ்வகை பாதிப்பு கொண்டவர்கள் என்பதை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

கண்பார்வையற்றவர்கள் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு துணையாக ஒருவர் வாக்குச்சாவடிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களால் ஆன வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே செல்போன் இணையதளம் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறித்து இந்த இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி சேவை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 34 ஆயிரத்து 653 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழுவினர் செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி குமார் வரவேற்றார். தேர்தல் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.