வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்


வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 17 March 2019 4:30 AM IST (Updated: 17 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து மண்டல அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துதல் மற்றும் மாதிரி வாக்குச்சாவடிகளை அமைத்தல் குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற பொதுத்தேர்தலும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர்(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கு, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்கு என மொத்தம் 2 வாக்குகள் செலுத்த வேண்டும். வாக்காளர்கள் அடையாள அட்டை தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 சான்றிதழ்களை காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்குச்சாவடி மையங்களை எவ்வாறு அமைக்க வேண்டும்? வாக்குச்சாவடி மையங்களில் என்னென்ன அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க மண்டல அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் சந்தேகங்களுக்கு உரிய தெளிவை பெற்று அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story