ஓய்வூதிய திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதிய திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 9:16 PM GMT)

ஓய்வூதிய திட்டத்தை அரசே பொறுப்பேற்று நடத்தக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

கும்பகோணம், நாகை மண்டல அரசு போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சையை அடுத்த கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். தலைவர் தியாகராஜன், கவுரவ தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதிய திட்டங்களை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1–ந்தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்திற்கு கணக்கிடும் 119 சதவீத அகவிலைப்படியை 125 சதவீதமாக உயர்த்த வேண்டும். நிலுவைத்தொகைகளை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


1–4–2003–க்கு பின் பணியில் சேர்ந்தவர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நீதிமன்ற தீர்ப்பினை காலம் தாழ்த்தாமல் உடனே அமல்படுத்த வேண்டும். வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், குடந்தை அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், மாணிக்கம், ஆழகிரி, முருகையன், வெங்கடபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story