திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு


திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணியால் சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2019 4:30 AM IST (Updated: 17 March 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடத்தில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டி ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கப்படும் இடத்தில் இருந்த ராட்சத குடிநீர் குழாய்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் மாற்றப்பட்டன.

திடீர் பள்ளம்

இந்தநிலையில் திருவொற்றியூர் மார்க்கெட் அருகே சாலையோரம் மாற்றப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் இருந்த இடத்தில் நேற்று அதிகாலை சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனால் குடிநீர் குழாய் சுமார் 5 அடிக்கு கீழே இறங்கியது.

அந்த பகுதியில் சாலையில் 15 அடி நீளத்துக்கு பள்ளம் விழுந்தது. நல்லவேளையாக அந்த இடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த திடீர் பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரெயில் பணி ஊழியர்கள், பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மூடி வருகின்றனர்.

இதனால் நேற்று அதிகாலை முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எண்ணூர் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Next Story