தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு அரசியல் கட்சியினர் 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு அரசியல் கட்சியினர் 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 16 March 2019 9:30 PM GMT (Updated: 16 March 2019 10:33 PM GMT)

தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவதற்கு 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.

கடலூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சந்தோஷினிசந்திரா, நேர்முக உதவியாளர்(கணக்கு) விநாயகம் பிள்ளை, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, கடலூர் நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த்ஜோதி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.வா.க., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேசிய தாவது;-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த வலியுறுத்தி இருக்கிறது. அதன்படி சுவிதா என்ற செல்போன் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே சுவிதா என்ற செல்போன் செயலியில் பதிவு செய்து அனுமதிபெற வேண்டும். நீங்கள் நடத்த இருக்கும் நிகழ்ச்சி குறித்து குறிப்பிட்ட செயலியில் பதிவு செய்தால் போதும், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி அளிப்பார்கள்.

அதேபோல் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வேட்பாளர் தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அதன் பிரிவுகள், ஏற்கனவே வழக்குகளில் தண்டனை பெற்று அனுபவித்து இருந்தால் அதன் விவரங்களை படிவம் சி-1, படிவம் சி-4 ஆகியவற்றில் தெரிவிக்க வேண்டும். பின்னர் அதுபற்றி வெவ்வேறு நாட்களில் 3 முறை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட படிவங்களில் கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான பதிலை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி இருக்கிறது. இதை அரசியல் கட்சியினர் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சுவிதா என்ற செல்போன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்க படம் காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வாகனம், கொடி, ஒலிபெருக்கிகள், பொதுக்கூட்ட மேடை, சாப்பாடு உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் நாள் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என்கிற விவரம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி, அரசியல் கட்சியினர் ஏற்க மறுத்ததுடன், இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார். 

Next Story