பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் கூட்டு பிரசாரம் தொடங்கியது நிலையான ஆட்சிக்காக கூட்டணி வைத்ததாக உத்தவ் தாக்கரே பேச்சு


பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் கூட்டு பிரசாரம் தொடங்கியது நிலையான ஆட்சிக்காக கூட்டணி வைத்ததாக உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 16 March 2019 11:19 PM GMT (Updated: 16 March 2019 11:19 PM GMT)

மராட்டியத்தில பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் கூட்டாக தங்கள் பிரசாரத்தை தொடங்கினர். மத்தியில் நிலையான ஆட்சி தொடர பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததாக உத்தவ் தாக்கரே பேசினார்.

நாக்பூர்,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரு கட்சி தலைவர்களும் கூட்டாக தங்களது பிரசாரத்தை நாக்பூரில் தொடங்கினர்.

இந்த பிரசார கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
பா.ஜனதா, சிவசேனா கூட்டணி இந்த முறை மராட்டியத்தில் 42 தொகுதிகளில் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சிலர் நம் ராணுவ வீரர்களின் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் பயங்கரவாத தலைவர் மசூத் அசாருக்கு மரியாதை கொடுக்கின்றனர். நாளைக்கு ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் வரலாற்றை கூட மாற்றி எழுதிவிடுவார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர்கள்.

நாங்கள் இந்துத்துவா கட்சிகள் என்று கூறிக்கொள்வதில் பெருமை படுகிறோம். இந்த சூட்சம கயிறு தான் பா.ஜனதாவையும், சிவசேனாவையும் இணைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
இந்த ததல் நாட்டிற்கானது என நான் கருதுகிறேன். தற்போதைய அரசு பாகிஸ்தானுக்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக வெறும் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து வந்தது. யார் அப்படிப்பட்ட ஆட்சியை மீண்டும் கொண்டுவர விரும்புவார்கள்?

எங்கள் கட்சிகளுக்கு இடையே மோதல் இருந்தது. ஆனால் நேரம் வந்ததும் நாங்கள் இணைந்துகொண்டோம். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது எங்களது நோக்கம் இல்லை. நாட்டின் நலனே எங்களின் கனவாகும். மத்தியில் நிலையான ஆட்சி தொடரவே இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரு கிரிக்கெட் வீரர்(இம்ரான்கான்) பிரதமர் ஆனார். அதுபோல கிரிக்கெட் சங்க நிர்வாகியாக இருந்த ஒருவர்(சரத்பவார்) இந்திய பிரதமராக விரும்புகிறார். பிரதமராக விரும்புவர்கள் முதலில் அந்த நாற்காலியில் உட்கார அவர்களுக்கு தகுதி உள்ளதா? என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story