கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை பஞ்சாலையில் பயங்கர தீவிபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து நாசம்
மதுரையை அடுத்த கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பஞ்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருமங்கலம்,
மதுரையை அடுத்த தனக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் (வயது 55), அவருடைய தம்பி சதீஸ்(50). இவர்கள் 2 பேரும் சேர்ந்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பஞ்சுகளை தரம்பிரித்து அனுப்பும் பஞ்சாலை நடத்தி வருகின்றனர். இந்த பஞ்சாலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தொழிலாளர்கள் சாப்பிடுவதற்காக பஞ்சாலையை விட்டு வெளியே சென்றனர். அப்போது எந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்ததாகவும், எந்திரத்தில் மின்கசிவு மற்றும் உராய்வு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. பஞ்சில் தீப்பற்றியதால், மளமளவன தீ ஆலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் சிட்கோ தொழிற்பேட்டையில் கரும்புகை சூழ்ந்தது. ஆலையில் தீப்பிடித்து எரிவதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியான தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருமங்கலம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் மதுரை, திருப்பரங்குன்றம், டி.கல்லுப்பட்டி ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் படையினர் வரவழைக்கப்பட்டனர். அதன்படி 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் பஞ்சாலையில் இருந்த பஞ்சு, எந்திரங்கள், தளவாட பொருட்கள், குடோன் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story