அமராவதி, யவத்மால், புல்தானா, ராம்டெக் 4 தொகுதி சிவசேனா வேட்பாளர் பட்டியல் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்


அமராவதி, யவத்மால், புல்தானா, ராம்டெக் 4 தொகுதி சிவசேனா வேட்பாளர் பட்டியல் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்
x
தினத்தந்தி 17 March 2019 5:21 AM IST (Updated: 17 March 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி, யவத்மால், புல்தானா, ராம்டெக் ஆகிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டார். இந்த தொகுதிகளில் பதவியில் இருக்கும் எம்.பி.க்களுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது.

இருப்பினும் எந்தெந்த தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிடுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, விதர்பா மண்டலத்தில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டார்.

வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1. அமராவதி தொகுதி - அனந்த்ராவ் அத்சுல்

2. யவத்மால்- வாஷிம் - பாவனா காவ்லி,

3. புல்தானா- பிரதாப் ஜாதவ்

4. ராம்டெக் - குருபால் துமானே

இந்த 4 தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தற்போது எம்.பி. பதவி வகிப்பவர்கள். அவர்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.

மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா மாநிலத்தில் உள்ள வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா நாடாளுமன்ற தொகுதிகள் தற்போது பா.ஜனதா வசம் உள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் சிவசேனா போட்டியிடுகிறது. இது தொடர்பான வேட்பாளர் பெயர்களை அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று வெளியிட்டார்.

அதன்படி கோவா மாநில சிவசேனா தலைவர் ஜதேஷ் காமத் வடக்கு கோவா தொகுதியிலும், மாநில கட்சியின் துணை தலைவர் ராகி பிரபுதேசாய் நாயிக் தெற்கு கோவா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மராட்டியத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா அண்டை மாநிலமான கோவாவில் அக்கட்சியை எதிர்த்து வேட்பாளர்களை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story