காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: திருச்சியில் பெண் போலீஸ் விஷம் தின்று தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: திருச்சியில் பெண் போலீஸ் விஷம் தின்று தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2019 4:45 AM IST (Updated: 18 March 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருச்சியில் பெண் போலீஸ் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். மோட்டார் சைக்கிளை லாரியில் மோதி காதலனும் தற்கொலைக்கு முயன்றார்.

கே.கே.நகர்,

கரூர் மாவட்டம், குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவருடைய மனைவி அயினாம்பாள். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ராஜலெட்சுமி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணிக்கு சேர்ந்தார். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி இருந்தார். இவர் கரூர் மாவட்டம் லாலப்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். சிவக்குமார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜலெட்சுமி திருவெறும்பூர் சார் கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் அன்று இரவு குடியிருப்புக்கு வந்த அவர், சிவக்குமாரிடம் நீண்டநேரம் செல்போனில் பேசி உள்ளார். பின்னர் அவருடைய தாயாரிடமும் போனில் பேசினார். நேற்று காலை சிவக்குமார், ராஜலெட்சுமிக்கு போன் செய்துள்ளார். நீண்டநேரமாக தொடர்பு கொண்டும் ராஜலெட்சுமி போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த சிவகுமார் ஆயுதப்படை குடியிருப்புக்கு விரைந்து வந்து பார்த்தபோது அங்கு ராஜலெட்சுமி மயங்கி கிடந்தார்.

அப்போது அவரிடம் விசாரித்தபோது, தான் அரளி விதையை(விஷம்) அரைத்து தின்று விட்டதாக சிவக்குமாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ராஜலெட்சுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் தனது பெயர் சிவக்குமார் என்றும், ராஜலெட்சுமியின் கணவர் என்றும் முகவரி கொடுத்து இருந்தார். அங்கு ராஜலெட்சுமியை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதனால், மனவேதனை அடைந்த சிவக்குமார் தனது நண்பர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட அவர், தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் திருச்சி-திண்டுக்கல் சாலையில் வேகமாக சென்று கொண்டு இருந்தார். கருமண்டபம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி மீது திடீரென மோதினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அந்த பகுதியினர் ஓடி சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே ராஜலெட்சுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் ராஜலெட்சுமியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து ராஜலெட்சுமியின் தாய் அயினாம்பாள் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தபுகாரில், “திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த எனது மகளை காதலிக்கும்படி தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் பணியாற்றி வரும் சிவக்குமார் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

அந்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் காதல் விவகாரத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story