அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து பொதுமக்கள் போராட்டம் - நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து பொதுமக்கள் போராட்டம் - நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 17 March 2019 10:30 PM GMT (Updated: 17 March 2019 6:57 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கொட்டப்பட்டி பகுதி மக்கள் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சியில் கொட்டப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. நேற்று இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள், தெருவிளக்கு கம்பங்களில் ‘கருப்பு கொடியை’ கட்டி வைத்தனர். மேலும் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொட்டப்பட்டி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது கத்தரிக்காய் ஆகும். அந்த அளவுக்கு கத்தரி சாகுபடியில் எங்கள் கிராமம் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போது விவசாயம் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகவே பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தோல் தொழிற்சாலை காரணமாக நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது. ஆனாலும் அந்த நீரையே பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் மட்டுமின்றி கழிப்பறை, விளையாட்டு மைதானம், சமுதாய கூடம், நூலகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினைக்காக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம். சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டோம்.

இதையடுத்து ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குழாய்கள் மூலம் எங்கள் பகுதிக்கு குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த குழாய்கள் வத்தலக்குண்டு-கொட்டப்பட்டி சாலை வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டி ஊருக்குள் குழாய்கள் பதிக்கவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் அவ்வப்போது குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை.

உப்புத்தன்மை அதிகம் உள்ள நீரை குடிப்பதால் எங்கள் பகுதி மக்களுக்கு நுரையீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதுவரை 15 பேர் நோய் பாதிப்பால் இறந்துள்ளனர். அத்துடன் திண்டுக்கல்லில் இருந்து கொட்டப்பட்டி, காமாட்சிபுரம், மயிலாப்பூர் வழியாக கன்னிவாடிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் இயக்கப்படுவதில்லை.

இதனால் அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப் படுகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் அந்த பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story