லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை


லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 7:57 PM GMT)

புதுக்கோட்டை அருகே நெல் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை,

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறும் என கடந்த 10-ந் தேதி அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள குழையான்விடுதி பகுதியில் வட்டார கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டார் தொலையில் வைத்து காரில் இருந்து எதோ ஒரு பொருளை நெல் ஏற்றி வந்த லாரிக்கு மாற்றினர். இதைக்கண்ட பறக்கும் படையினர் சந்தேகமடைந்து, லாரி நின்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் டிரைவரின் சீட்டிற்கு அடியில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் இருந்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் லாரி டிரைவர் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த கோபி (வயது 30), கிளனர் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலாஜி (19) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் திருச்சியை சேர்ந்த நெல் வியாபாரி பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை பறிமுதல் செய்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர். இது குறித்து பறக்கும் படையினர் கூறுகையில், லாரியில் இருந்த ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்திற்கு எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால் நாங்கள் பறிமுதல் செய்தோம். இந்த பணம் நெல் வியாபாரியின் பணம் என்றால், அவர் உரிய ஆவணங்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காட்டி பணத்தை பெற்று செல்லலாம் என்றனர். 

Next Story