குழித்துறை மறை மாவட்ட ஆயர் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம்


குழித்துறை மறை மாவட்ட ஆயர் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 8:33 PM GMT)

குழித்துறை மறை மாவட்ட ஆயர் தாக்கப்பட்டதை கண்டித்து முளகுமூட்டில் பொதுக்கூட்டம் நடந்தது.

அழகியமண்டபம்,

அப்பட்டுவிளையில் புனித அந்தோணியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம் ஆகிய இரு ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கிடையே நிலம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையை தீர்க்க குழித்துறை மறை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட முயற்சி எடுத்தது.

ஆனால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாமலைக்கடையில் உள்ள ஆயர் இல்லத்தில் புனித அந்தோணியார் ஆலய பங்கு மக்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த ஆயர் ஜெரோம்தாஸ், காவலாளி மனோகரன் ஆகியோர் அந்தோணியார் ஆலய பங்கு மக்களால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ஆயர் ஜெரோம்தாஸ் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் இயேசு ரத்தினம் பொதுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், பங்கு தந்தை டொமினிக் கடாட்சதாஸ், அருட்பணியாளர்கள், மறை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆயர் தாக்கப்பட்டதை கண்டித்து பேசினர்.

Next Story