தஞ்சை அருகே வயல்களில் எருவை கொட்டி குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்


தஞ்சை அருகே வயல்களில் எருவை கொட்டி குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 9:08 PM GMT)

தஞ்சை அருகே வயல்களில் எருவை கொட்டி குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி திறக்கப்பட்டால் அதிக பரப்பளவில் சாகுபடி நடைபெறும். குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படாவிட்டால் நிலத்தடி நீரை நம்பி குறைந்த பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும். தற்போது சம்பா நெல் அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அறுவடை முடிந்த இடங்களில் கோடை நெல், எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை முடிந்த பகுதியில் வேறு எந்த சாகுபடியும் செய்யவில்லை. அவர்கள் இப்போதே குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதாவது எருவை சரக்குஆட்டோவில் அள்ளி வந்து வயல்களில் கொட்டி குவித்து வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டை பகுதியில் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஏதுவாக வயல்களில் எருவை கொட்டி குவித்து வைத்துள்ளனர். இவர்கள் ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, எங்கள் வயலுக்கு அருகில் தான் வெண்ணாறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் வந்தாலும் எங்களால் ஆற்று தண்ணீரை நம்பி சாகுபடி செய்ய முடியாது. ஏனென்றால் ஆற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் வருவதற்கு ஏதுவாக வாய்க்கால் சென்றது. ஆனால் சுற்றுச்சாலை போடும்போது வாய்க்காலையும் சேர்த்து மூடி சாலை அமைத்துவிட்டனர். இதனால் தண்ணீர் வர வழியில்லை.

நாங்கள் ஆழ்குழாய் கிணறு மூலம் தான் விவசாயம் செய்து வருகிறோம். முன்பெல்லாம் முப்போகம் சாகுபடி செய்வோம். இப்போது குறுவை, சம்பா சாகுபடி மட்டும் செய்கிறோம். சம்பா அறுவடை முடிந்துவிட்டதால் வேறு பயிர்கள் சாகுபடி செய்யாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக எருவை வயலில் கொட்டி குவித்து வைத்துள்ளோம். இன்னும் சில நாட்களில் அந்த எருவை வயல் முழுவதும் பரப்பி வைத்து உழவு பணியை மேற்கொள்வோம் என்றனர்.

Next Story