ஊத்தங்கரை அருகே மாங்காய் திருடியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை மனைவி படுகாயம்


ஊத்தங்கரை அருகே மாங்காய் திருடியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 18 March 2019 3:30 AM IST (Updated: 18 March 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே மாங்காய் திருடியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அருகே மாங்காய் திருடியதை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊத்தங்கரை அருகே உள்ள மிட்டப்பள்ளி பக்கமுள்ள ஓபகா வலசை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 60). இவரது மனைவி மங்கம்மாள் (54). இவர்கள் நேற்று அதிகாலை மாந்தோப்பில் காவலுக்கு இருந்தனர். அப்போது பக்கத்து தோட்டத்துக்காரர் திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

இதனால் வெங்கட்ராமன், மங்கம்மாள் ஆகியோர் அங்கு ஓடினர். அப்போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இருந்தது. அவர்களை வெங்கட்ராமன் பிடிக்க முயன்றார். அப்போது அவரையும், மங்கம்மாளையும் மர்ம கும்பல் தாக்கியது. இதில் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மங்கம்மாள் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த நிலையில் காயம் அடைந்த மங்கம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கம்மாள் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் ஊத்தங்கரையை அடுத்த மல்லிப்பட்டியைச் சேர்ந்த மாதையன் (40), மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் வந்து தங்களின் தோட்டத்தில் மாங்காய் திருடினார்கள்.

இதை தட்டிக் கேட்ட எனது கணவரை அடித்துக் கொலை செய்தனர். என்னையும் தாக்கி விட்டு சென்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வெங்கட்ராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கொலையுண்ட வெங்கட்ராமனின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story