தொழில் அதிபர் வீட்டில் ரூ.34 லட்சம் பறிமுதல் சேலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை


தொழில் அதிபர் வீட்டில் ரூ.34 லட்சம் பறிமுதல் சேலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2019 9:30 PM GMT (Updated: 17 March 2019 10:00 PM GMT)

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் இருந்த ரூ.34 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம்,

சேலம் சங்கர் நகர் ஹரேகிருஷ்ணா சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). தொழில் அதிபர். இவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையொட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கண்ணன் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டுக்குள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அடுக்குமாடி என்பதால் ஒவ்வொரு மாடிக்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு அறைகளிலும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் துணிப்பைகள் மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். பின்னர் அவற்றை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.200 புத்தம், புதிய நோட்டுக்கள் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

தொடர்ந்து போலீசார் லட்சக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருமான வரித்துறை உதவி ஆணையர் சிவசெல்வி தலைமையில் அதிகாரிகள், கண்ணன் வீட்டுக்கு விரைந்து வந்தனர். பின்னர் 5 பேர் கொண்ட குழுவினர் கண்ணன் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். மேலும் கண்ணனை தனி அறையில் வைத்து கட்டுக்கட்டாக பணம் எப்படி வந்தது? என விசாரித்தனர்.

அப்போது அவரிடம், வருமானவரி கட்டி உள்ளர்களா? அப்படியானால் அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள்? என்று கேட்டனர். தொடர்ந்து கண்ணன் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறும் போது, பணம், நகைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.34 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து உள்ளோம். மேலும் ஒரு கிலோ தங்க நகைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் லாட்டரி சீட்டுகளை விற்றதால் கிடைத்த பணம் என்று கண்ணன் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பறிமுதல் செய்த பணத்தை போலீசாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக அரசியல் கட்சியினர் யாராவது கண்ணனிடம் பணத்தை கொடுத்து வைத்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story