கொருக்குப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவர் உள்பட 3 பேர் கைது


கொருக்குப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2019 4:00 AM IST (Updated: 18 March 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை சிறுமி, டியூஷனுக்கு சென்றாள். அவளை பார்த்த ஆசிரியை, “நீ ஏன் சோர்வாய் இருக்கிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி, தனக்கு 3 பேர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, இதுபற்றி ஆர்.கே.நகர்.போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அதில், சிறுமியின் தந்தை இறந்து விட்டார். அவள், தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகிறாள். தாயார் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார். அதன்பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பாள்.

அப்போது கொருக்குப்பேட்டை பாரதிநகர் 11-வது தெருவைச் சேர்ந்த ரத்தினம் (72), 1-வது தெருவை சேர்ந்த வளையல் வியாபாரி ராஜா(46), பெயிண்டரான லட்சுமி என்ற லட்சுமணன் (38) ஆகியோர் கடந்த ஒரு மாதமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து ரத்தினம், ராஜா, லட்சுமணன் ஆகியோரை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுமியை சென்னையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story