டெல்லி- பாந்திரா ரெயிலில் துப்பாக்கி சுடும் வீரரின் பெட்டியை திருடிய தம்பதி கைது


டெல்லி- பாந்திரா ரெயிலில் துப்பாக்கி சுடும் வீரரின் பெட்டியை திருடிய தம்பதி கைது
x
தினத்தந்தி 18 March 2019 4:12 AM IST (Updated: 18 March 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி- பாந்திரா ரெயிலில் துப்பாக்கி சுடும் வீரரின் பெட்டியை திருடிய அண்டாப்ஹில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை மாட்டுங்கா மேற்கு பகுதியை சேர்ந்தவர் ரெயில்வே அதிகாரி விஸ்வஜித்(வயது48). இவர் தாதரில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பயிற்சியாளராகவும் உள்ளார். விஸ்வஜித் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர் ஆவார். இவர் கடந்த 15-ந்தேதி டெல்லியில் இருந்து மும்பைக்கு டெல்லி-பாந்திரா ரெயிலில் வந்தார். பாந்திரா டெர்மினசுக்கு ரெயில் வந்தவுடன் விஸ்வஜித் உடைமைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

அப்போது அவர் பயிற்சியில் ஈடுபட கொண்டு வந்த 3 ஆயிரத்து 800 துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த பெட்டி மாயமாகி இருந்தது. எனவே அவர் இது குறித்து பாந்திரா ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு தம்பதி ரெயிலில் இருந்து விஸ்வஜித்தின் பெட்டியை எடுத்துக்கொண்டு டாக்சியில் ஏறிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் தம்பதியை ஏற்றிச்சென்ற டாக்சி டிரைவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தம்பதியை சயான்கோலிவாடா அண்டாப்ஹில் பகுதியில் இறக்கிவிட்டதாக கூறினார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார், அண்டாப்ஹில் போலீசார் உதவியுடன் தம்பதியை தேடினர். இதில், விஸ்வஜித்தின் பெட்டியை திருடியது அண்டாப்ஹில் சங்கம்நகர் மகாடா காலனியை சேர்ந்த லலித் மனோஜ்குமார்(28) மற்றும் அவரது மனைவி ஜோதி(25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் தம்பதியை கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்து பெட்டியை கைப்பற்றினர். அந்த பெட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி உபகரணங்கள் இருந்தன. பெட்டியில் பணம், நகை இருக்கும் என்று கருதி அவர்கள் திருடியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட லலித் மனோஜ்குமார் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக உள்ளார். அவரது மனைவி ஜோதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

படித்து நல்லவேலையில் உள்ள தம்பதி சகபயணியின் பெட்டியை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story