காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை - வைத்திலிங்கம் போட்டி?


காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை - வைத்திலிங்கம் போட்டி?
x
தினத்தந்தி 17 March 2019 11:57 PM GMT (Updated: 17 March 2019 11:57 PM GMT)

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கட்சி அனுமதித்தால் தேர்தலில் போட்டியிட தயார் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார். அதே நேரத்தில் தேர்தல் செலவுகளை கட்சி ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பதவியில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கட்சியின் தலைமையகம் அறிவித்து இருந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் மாநிலம் முழுவதும் அறிமுகம் ஆனவரை நிறுத்தினால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கருத்து எழுந்தது. எனவே முன்னாள் சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியனை நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேட்பாளரை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளரான சஞ்சய்தத் புதுவை வந்தார். அவர் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொருவரையும் தனித் தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கத்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் சஞ்சய் தத் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

இந்த கூட்டத்தில் ஏ.வி.சுப்ரமணியனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறும் வாய்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. காரைக்கால் பகுதியை சேர்ந்த ஏ.வி.சுப்ரமணியனை வேட்பாளராக நிறுத்தினால் புதுவையில் வாக்குகளை பெறுவது கடினம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். புதுவை மாநிலம் முழுவதற்கும் நன்கு தெரிந்தவர். முதல்-அமைச்சர், அமைச்சர் பதவிகளை வகித்தவர். தற்போது சபாநாயகராக உள்ளார்.

அவருக்கு புதுவை மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது. எனவே அவரை இந்த தேர்தலில் களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். மேலும் தேர்தல் செலவுகளை கட்சியினர் ஒருங்கிணைந்து ஏற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் கமலக்கண்ணனிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளும். எனவே புதுவை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கூடிய விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

Next Story