திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 17 March 2019 9:45 PM GMT (Updated: 17 March 2019 11:57 PM GMT)

திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலைந்து திரியும் அவலம் நீடிக்கிறது.

தொண்டி,

திருவாடானை யூனியனில் உள்ள 47 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த யூனியனில் உள்ள கடற்கரை கிராமங்களான காரங்காடு, முள்ளிமுனை முதல் எஸ்.பி.பட்டினம் வரை உள்ள புல்லக்கடம்பன், கலியநகரி, வட்டாணம், கொடிப்பங்கு, நம்புதாளை, புதுப்பட்டினம், முகில்தகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் காலம் காலமாக பொதுமக்கள் குடிநீருக்காக படும் துயரங்கள் இன்றுவரை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த யூனியன் பகுதியில் எங்கு பார்த்தாலும் இரவு நேரங்களில் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக காத்துக்கிடக்கும் நிலை நீடிக்கிறது. இந்த தாலுகாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களில் சில அதன் செயல்பாட்டை இழந்து பல ஆண்டுகளாகி விட்டது. சில திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தாலும் அதன் பழைய தன்மையை இழந்துவிட்டது. கடந்த 20 வருடங்களில் ஒரு சில குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டாலும் பெரிய அளவில் மக்களுக்கு பயன் தரவில்லை.

இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனாலும் இந்த யூனியனில் உள்ள அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்படாத நிலையில் பல கிராமங்கள் விடுபட்டு உள்ளன. இதனால் அந்த கிராமங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கவில்லை. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கும் முழுமையாக காவிரி குடிநீர் செல்லவில்லை. காவிரி குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறைய தொடங்கி உள்ளது.

காவிரி மற்றும் கூட்டு குடிநீர் திட்டங்களின் குடிநீர் குழாய்கள் ஆங்கங்கே உடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பல இடங்களில் சமூக விரோதிகள் குடிநீர் குழாய்களை தங்களின் சுய லாபத்திற்காக உடைத்து விடுவதாலும் பல கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் தடைபடுவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார்கள் செய்தும் சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்த யூனியனில் பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் குடிநீர் குடங்கள் கொண்டு செல்லவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வண்டிகளில் பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரிவதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைந்து தெருவில் ஓடும் கழிவுநீரை குடங்களில் சேகரித்து செல்வதையும் காண முடிகிறது.

இதன் காரணமாக தினமும் பொதுமக்கள், பெண்கள் காலி குடங்களுடன் திருவாடானையில் உள்ள அரசு அலுவலகங்களை தினமும் முற்றுகையிட்டு தங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த கால கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் ஊராட்சிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய முடியாமல் பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த யூனியனில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு உடனுக்குடன் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைத்து குடிநீரை வீணாகாமல் தடுக்க வேண்டும். மேலும் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story