வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல திருநாவுக்கரசுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? 3-வது நாள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல திருநாவுக்கரசுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? 3-வது நாள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 4:15 AM IST (Updated: 18 March 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்ல உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? என்று 3-வது நாளாக நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிடப்பட்டுள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக நடந்த பாலியல் வன்முறை குறித்து 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த புகார் தொடர்பாக திருநாவுக்கரசு(வயது 27) மற்றும் அவரது கூட்டாளிகளான சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து உப்பிலிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவரிடம் நேற்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் தங்கள் வலையில் விழுந்த பெண்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அப்போது போலீசாரும் விசாரணையை தொடங்கினார்கள். ஆனால் அரசியல் பிரமுகர்களின் உதவியால் விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் இந்த கும்பல் தப்பியது. இதற்காக பல லட்சம் ரூபாய் போலீசாருக்கு கைமாறியதாகவும், அப்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை இந்த அளவிற்கு பூதாகரமாகி இருக்காது என்றும் புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததும் திருநாவுக்கரசின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் இதில் முக்கிய ஆசாமியான திருநாவுக்கரசு தலைமறைவானார். அவரை வெளிமாநிலத்துக்கு தப்பி செல்லுமாறு போலீஸ் அதிகாரிகள் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் பாலியல் பலாத்கார பிரச்சினை பரபரப்பானதும் திருநாவுக்கரசு மாக்கினாம்பட்டி திரும்பினார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதற்கு முன்பு திருநாவுக்கரசு வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்சினை போலீசாரின் கவனத்துக்கு வந்த போது திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? திருநாவுக்கரசை வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல கூறிய போலீஸ் அதிகாரிகள் யார்? என்பன போன்ற விவரங்கள் தற்போது திருநாவுக்கரசிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கைதான 4 பேரின் தொடர்பில் இருந்த முகநூல் நண்பர்களின் பட்டியலை போலீசார் எடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உள்ள சில அடையாளங்கள் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதை உறுதிப் படுத்துகிறது. எனவே திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் தான் பெண்களை ஆபாச படம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த இடங்களுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள்.

பாலியல் வழக்கினால் திருநாவுக்கரசு குடும்பத்தினர் அவமானத்தை சந்தித்துள்ளனர். இதற்கு முன்பு திருநாவுக்கரசின் தாயார் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுடன் சகஜமாக பேசி பழகி வந்துள்ளார். ஆனால் தற்போது அவர்களுடன் அந்த பகுதி மக்கள் யாரும் பேசுவது கிடையாது. பொதுமக்களின் வெறுப்பினால் தனிமைப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் குடும்பத்தினர் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில் திருநாவுக்கரசின் காலில் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென்று வீக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். திருநாவுக்கரசின் போலீஸ் காவல் இன்று(திங்கட்கிழமை) முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து திருநாவுக்கரசை போலீசார் இன்று மாலை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது. அதன்பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்.

Next Story