விருதுநகர் ரெயில்வே மேம்பாலத்துக்கு உறுதிச்சான்று பெற்ற பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தினை முறையாக ஆய்வு செய்து உறுதிச்சான்று அளித்த பின்பே பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு திறந்துவிட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால கட்டுமானப்பணி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய கட்டுமானப்பணி ஓராண்டு தாமதத்திற்கு பின் தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு சில பணிகள் முழுமை பெற வேண்டியிருந்தாலும் அவசியம் கருதி இந்த மேம்பாலத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என நகர் மக்கள் எதிர்பார்க்கும் நிலை உள்ளது.
தற்போதுள்ள நிலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டிருந்தாலும் இடைவெளி வழியாக இருசக்கர வாகனங்களும், கார்களும், ஆட்டோக்களும் சென்று வரும் நிலை உள்ளது. ஆனால் பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. பாலம் கட்டுமானப் பணியை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் பாலத்தில் உறுதித்தன்மை குறித்து முறையாக ஆய்வு செய்து சான்றளித்த பின்புதான் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து முறையாக தொடங்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் தற்போது சிறு வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லும் நிலை உள்ளது.
தற்போது மேம்பால கட்டுமானப்பணி நடைபெற்று வந்ததால் மாற்றுப்பாதையான தந்திமரத்தெரு வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. பங்குனி பொங்கல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மேம்பாலம் வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேம்பாலத்தினை விதிமுறைப்படி ஆய்வு செய்து பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்திற்கு தாமதமின்றி ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை எவ்வகையிலும் தடை செய்ய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. தேவைப்பட்டால் முறையாக அனுமதி பெற்று மேம்பாலத்தினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story