மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விழிப்புணர்வு


மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விழிப்புணர்வு
x
தினத்தந்தி 19 March 2019 4:15 AM IST (Updated: 19 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மாதிரி வாக்குப்பதிவினை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கண்பார்வையற்ற, நடந்து வர இயலாத உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு ஏதுவாக சக்கர நாற்காலி வைப்பது, சைகை மொழிபெயர்ப்பாளரை நியமிப்பது என பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட உதவியாளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தயாராக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 100 சதவீத வாக்குப்பதிவினை முன்னிலைப்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அதிகாரியும் மற்றும் துணை தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ‘நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் நேர்மையாக வாக்களிப்போம், தங்கள் பெற்றோரையும், உறவினர்களையும் வாக்களிக்க வலியுறுத்துவோம், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல“ என்பன போன்ற உறுதிமொழியினை மாற்றுத்திறனாளிகள் பலர் ஏற்று கொண்டடனர். அப்போது முனிவர், பாரதியார் உள்ளிட்டோர் வேடமணிந்து வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி விளம்பர பதாகைகளை பிடித்து கோஷம் எழுப்பி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வாயில் சாலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலான வண்ணக்கோலமிட்டிருந்ததை வருவாய் அதிகாரி பார்வையிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சக்கர நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளியை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகே கொண்டு நிறுத்தி வைப்பது, பின்னர் அவர் மறைமுகமாக தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு, வி.வி.பேட் கருவியில் யாருக்கு வாக்களித்தோம் என அறிவது ஆகியவை தத்ரூபமாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட இரண்டுசக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் புறப்பட்ட மாற்றுத்திறனாகளின் ஊர்வலம் சென்றனர். அப்போது லைட்ஹவுஸ் ரவுண்டானா, சுங்ககேட், பஸ் நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் நேர;மையாக வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர;வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நச்சலூர் வாரச்சந்தையில் வாக்களிக்கும் வழிமுறைகள் குறித்தும், வி.வி.பேட் கருவி மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது குறித்து பொது மக்களிடம் விளக்கும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கு குளித்தலை கூடுதல் உதவி தேர்தல் அலுவலரும், வட்டாட்சியருமான சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். அப்போது ஏப்ரல் 18-ந்தேதி வாக்குப்பதிவு நாள் அன்று மறவாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் நங்கவரம் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், நங்கவரம் தெற்கு 1 கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story