ரூ.21 லட்சம் மோசடி வழக்கு: சினிமா தயாரிப்பு நிறுவன தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


ரூ.21 லட்சம் மோசடி வழக்கு: சினிமா தயாரிப்பு நிறுவன தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 18 March 2019 10:15 PM GMT (Updated: 18 March 2019 8:22 PM GMT)

ரூ.21 லட்சம் மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பு நிறுவன தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

திருச்சி,

திருச்சி கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெருவில் வசிப்பவர் நஸ்ருதீன். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “அலாவுதீன், அவரது மனைவி புவனேஸ்வரி என்கிற பல்கிஸ், சையது சாகுல் ஹமீது ஆகியோர் புதிதாக படம் தயாரிப்பு நிறுவனம் போல தொடங்கி கடந்த 2010-ம் ஆண்டு ஹாஜி சினி கிரியேசன் என நிறுவனத்தை பதிவு செய்து, என்னை (நஸ்ருதீன்) பங்குதாரராக சேர்த்தனர். அந்த பட நிறுவனத்தில் லாபத்தில் பங்கு தருவதாக என்னிடம் ரூ.20 லட்சத்து 96 ஆயிரம் பெற்று ‘சத்திரம் பஸ் நிலையம்’ என்ற பெயரில் தமிழ் படத்தை தயாரித்தனர். அதன்பின் பணத்தை தராமல் 3 பேரும் ஏமாற்றி விட்டனர்” என்று புகார் அளித்திருந்தார். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-5 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நாகப்பன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், அலாவுதீனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், புவனேஸ்வரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சையது சாகுல் அமீதுவை விடுதலை செய்தார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார். 

Next Story