வாகனங்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் அதிகாரி எச்சரிக்கை


வாகனங்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 19 March 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

‘வாகனங்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டிப்பட்டி,

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு முன்னிலை வகித்தார். ராஜதானி, கண்டமனூர், மயிலாடும்பாறை கடமலைக்குண்டு, க.விலக்கு போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் மற்றும் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு பேசியதாவது:-

பிரசார கூட்டங்கள், தெருமுனை பிரசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால் 3 நாட்களுக்கு முன்னதாக அரசியல் கட்சியினர் அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும். வழிபாட்டுதலங்களின் அருகே பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது.

நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை எந்தவொரு வாகனங்களிலும் அரசியல் கட்சியினர் தங்களது கொடிகளை கட்டக்கூடாது. இதையும் மீறி கட்சி கொடிகளை கட்டியப்படி உலா வரும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு மக்களை மொத்தமாக வாகனங்களில் அழைத்து வரக்கூடாது. மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தலில் பலமுனை போட்டி உள்ளதால், அனைத்து கட்சியினரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்தலை அமைதியான முறையில் நடத்திட அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story