பரோட்டாவுக்கு வெங்காயம் கொடுக்காததால் ஓட்டலில் தகராறு செய்த டிரைவர் மீது தாக்குதல் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பரோட்டாவுக்கு வெங்காயம் கொடுக்க மறுத்ததால் ஓட்டலில் தகராறு செய்த டிரைவர் தாக்கப்பட்டார். அதை கண்டித்து மினிபஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
சேலம் மாவட்டம் எடப்பாடி நங்கவள்ளியை சேர்ந்த சண்முகத்தின் மகன் சங்கர் (வயது 29). இவர் ஈரோட்டில் மினி பஸ் டிரைவராக உள்ளார். நேற்று மதியம் சங்கர் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்றார். அங்கு அவர் சாப்பாடு கேட்டதற்கு ஓட்டல் ஊழியர் சாப்பாடு இல்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சங்கர் பரோட்டா வாங்கி சாப்பிட்டார்.
அப்போது பரோட்டாவுக்கு வெங்காயம் வேண்டுமென்று சங்கர் கேட்டுள்ளார். ஆனால் ஓட்டல் ஊழியர் வெங்காயம் கொண்டு வந்து கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் எழுந்து சென்று ஓட்டலின் காசாளர் விஜயிடம் முறையிட்டார்.
அதற்கு விஜய், நேரமாகிவிட்டதால் வெங்காயம் காலியாகிவிட்டது என்றும், இனி இரவு உணவுக்குத்தான் வெங்காயம் கொடுக்க முடியும் என்றும் கூறினார். இதனால் சங்கர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த விஜய், டிரைவர் சங்கரை தாக்கினார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பஸ் நிலையத்தில் இருந்த மினிபஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓட்டலின் முன்பு திரண்டனர். அவர்கள் காசாளர் விஜயை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று மினிபஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர்.
அதன்பின்னர் மினிபஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், மறியலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.