போலி சிம் கார்டு வாங்கிய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 2 மாவோயிஸ்டுகள் ஆஜர் கோவை போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு
சிவகாசியில் போலி சிம் கார்டு வாங்கிய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் கோவை போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கடந்த 2008–ம் ஆண்டு சிவகாசியில் வசிக்கும் கணேஷ் என்பவரது ரேஷன் கார்டு மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளான அனுப்மேத்யூ ஜார்ஜ், சைனி ஆகியோர் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
மாவோயிஸ்டுகள் 2 பேரும் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிம்கார்டு வாங்கிய வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்ததால் கோவை போலீசார் மாவோயிஸ்டுகள் அனுப்மேத்யூ, சைனி ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வந்து ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 1–ந்தேதி வழக்கை ஒத்தி வைத்து அன்றைய தினம் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோதும், திரும்ப கொண்டு செல்லும் போதும் மாவோயிஸ்டுகள் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் போட்டனர். இதற்கு மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு என்றும் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.