கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கோவை சிறையில் ஷயான், மனோஜுக்கு அச்சுறுத்தல் - வக்கீல் புகார்


கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: கோவை சிறையில் ஷயான், மனோஜுக்கு அச்சுறுத்தல் - வக்கீல் புகார்
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 11:12 PM GMT)

கோடநாடு கொலை- கொள்ளை வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஷயான், மனோஜுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வக்கீல் புகார் கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள சம்சீர் அலி, சதீசன், சந்தோஷ்சாமி, உதயகுமார், ஜித்தின்ராய் ஆகிய 5 பேர் நீதிபதி வடமலை முன்பு ஆஜரானார்கள். ஆனால் கோவை மத்திய சிறையில் இருந்து வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவதால், விசாரணையை மதியம் 3 மணிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து ஷயான், மனோஜ், திபு, பிஜின், மனோஜ்சாமி ஆகியோரை போலீசார் ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது ஷயான், மனோஜ் ஆகியோர் வக்கீல் ஆனந்த் என்பவரிடம் பேச வேண்டும் என்று போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் 5 பேரும் ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து மதியம் 3 மணியளவில் ஷயான், மனோஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வக்கீல் ஆனந்த் நீதிபதியிடம் ஷயான், மனோஜ் என்னிடம் பேச முயற்சித்த போது, போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே அவர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அப்போது ஷயான், மனோஜ் ஆகியோரின் பாதுகாப்பு கருதி போலீசார் பேச அனுமதி வழங்கவில்லை என்று அரசு வக்கீல் பாலநந்தகுமார் கூறினார்.

இதையடுத்து ஷயான், மனோஜ் தவிர மற்ற 8 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி வக்கீல் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலிடம் நீதிபதி தெரிவித்தார். இதை தொடர்ந்து கோடநாடு வழக்கு விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் வக்கீல் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட ஷயான், மனோஜ் ஆகியோரிடம் நீதிபதி வடமலை அனுமதியுடன் போலீசார் 5 நிமிடம் பேச அனுமதி அளித்தனர். அப்போது அவர்கள் தங்களை கோவை மத்திய சிறையில் தனிமைப்படுத்தி, அங்கிருப்பவர்களிடம் பேசக்கூடாது என்று சிறை காவலர்கள் கூறியதாக என்னிடம் தெரிவித்தனர்.

ஷயான் தண்டனை குற்றவாளி வைக்கப்படும் சிறை அறையிலும், மனோஜ் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களை அடைக்கும் சிறை அறையிலும் உள்ளதாகவும், தங்களுக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story