தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் இல்லை


தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் இல்லை
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 3:54 PM GMT)

தஞ்சை நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல்செய்யும் அலுவலகங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23–ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் வருகிற 26–ந்தேதி ஆகும். வேட்புமனுக்கள் 27–ந்தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 29–ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.

தஞ்சை நாடாளுமன்ற தேர்தலோடு, தஞ்சை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து விட்டன. இதையடுத்து வேட்பாளர்கள் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


தஞ்சை நாடாளுமன்ற தேர்தலுக்கு, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலெக்டர் அண்ணாதுரையிடமும், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேசிடமும், வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தஞ்சை சட்டசபை தொகுதிக்கு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேசிடமும், தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தாசில்தார் அருணகிரியிடமும் வேட்புனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுதாக்கல் தொடங்கியதால் இந்த அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், முத்துக்குமார், செங்குட்டுவன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒருசில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர்.

Next Story