தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலேசிய விமானம் 11½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டது பயணிகள் அவதி


தொழில்நுட்ப கோளாறு காரணமாக மலேசிய விமானம் 11½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டது பயணிகள் அவதி
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 7:37 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு 11½ மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

செம்பட்டு,

மலேசிய நாட்டு தலைநகரான கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வழக்கமாக இரவு 10 மணிக்கு வரும். பின்னர் 10.30 மணிக்கு திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.12 மணிக்கு அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் இருந்து பயணிகள் இறங்கியபிறகு மீண்டும் அந்த விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட தயாரானது. அதற்கு முன்பாக விமானத்தை பொறியாளர்கள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் வரை தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகளும் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் நள்ளிரவு நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஏர் ஏசியா விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் 11½ மணி நேரம் தாமதமாக நேற்று காலை 10 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் குறித்த நேரத்தில் கோலாலம்பூருக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

Next Story