பழங்கால கற்சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டி


பழங்கால கற்சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டி
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 7:43 PM GMT)

பழங்கால கற்சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் அருந்தவ நாயகி சமேத ஆலந்துறையார் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இக்கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இக்கோவிலில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகளையும், அதன் வரைபடங்களையும் ஆய்வு செய்த அவர் படங்களில் உள்ள சிலைகள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? என ஆய்வு செய்தார். பின்னர் அவர் இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நம் நாட்டில் உள்ள பழங்கால கற்சிலைகள் வெளிநாட்டில் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனால் அனைத்து பழங்கால கற்சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள அனைத்து சிலைகளும் சாதாரண முறைகளிலேயே பதிவேடுகள் செய்யப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் அனைத்து சிலைகளையும் டெல்லியில் உள்ள சிலை பாதுகாப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட உள்ளது.

அப்படி பதிவு செய்வதன் மூலமாக எந்த சிலை தொலைந்தாலும் உடனே கண்டு பிடிப்பதற்கு சுலபமாக இருக்கும். இதுபோன்ற பழங்கால கோவில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்க தனியாக பாதுகாப்பு அறை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் அது போன்று பாதுகாப்பு அறைகள் அமைக்கும் ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின் கோவில் நிர்வாக அதிகாரியிடம் உடைந்த சிலையாக இருந்தாலும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றார். தற்போது கோவிலில் திருவிழா காலம் நடைபெற்று வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என குறைவான சிலைகளையே பொன் மாணிக்கவேல் ஆய்வு செய்தார். இக்கோவிலில் முழு ஆய்வு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்தார். அப்போது அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன், கோவில் நிர்வாக அதிகாரி யுவராஜ் மற்றும் போலீசார், கோவில் அலுவலர்கள், குருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story