பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது மாணவ-மாணவிகள் பிரியாவிடை பெற்றனர்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது மாணவ-மாணவிகள் பிரியாவிடை பெற்றனர்
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 8:18 PM GMT)

பிளஸ்-2 தேர்வு நிறைவடைந்ததை தொடர்ந்து மாணவ, மாணவிகள் பிரியாவிடை பெற்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கு முதல் தாள், இரண்டாம் தாள் என்று இல்லாமல், ஒரே தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். கரூர் மாவட்டத்தில் 40 மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. 5,472 மாணவர்கள், 5,911 மாணவிகள் என மொத்தம் 11,383 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்தது. நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு, ஆடிட்டிங் அக்கவுண்டன்சி உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிந்ததும் வெளியே வந்த மாணவ, மாணவிகள் வினாத்தாளில் ஏற்பட்ட சந்தேகங்கள் பற்றியும், எதிர்காலத்தில் கல்லூரியில் எந்த படிப்பை தேர்வு செய்து படிப்பது? மருத்துவம்-என்ஜினீயரிங் துறைக்கு செல்ல வேண்டும் என்றால் எத்தகைய வழிமுறையை மேற்கொள்வது? என்பன உள்ளிட்டவை குறித்து தங்களுடைய ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். பள்ளி படிப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர்.

பிரியா விடை

கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்ததும், வினாத்தாளை தூக்கி வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ஒருவர் மீது ஒருவர் மை தெளித்தும், வண்ண பொடிகளை தூவியும் விளையாடினர். தங்களது பள்ளி படிப்பின் நீங்கா நினைவாக இருக்கும் வகையில், பல மாணவ, மாணவிகள் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்து ஆர்ப்பரித்ததை காண முடிந்தது. சிலர் ஒரு வழியாக பிளஸ்-2 வகுப்பை கடந்துவிட்டோம் என்று கூறி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்ததால் சிறிது நேரத்திலேயே பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தங்களுடைய நண்பர்கள், தோழிகளுக்கு பிரியா விடை கொடுத்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 

Next Story