கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்த அதிகாரிகள்: முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை


கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்த அதிகாரிகள்: முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 20 March 2019 4:30 AM IST (Updated: 20 March 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசல், அலுவலக நுழைவு வாசல், கலெக்டர் அலுவலக அறை அமைந்துள்ள முதல் தளம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் உள்பட அனைவரையும் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதற்காக மெட்டல் டிடெக்டர் கதவும் அமைக்கப்பட்டு இருந்தது.

திருச்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டர் சிவராசு, வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் ஆகியோர் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தங்களது அலுவலக அறைகளில் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் நேற்று மாலை 3 மணி வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. வருகிற 26-ந்தேதி வரை (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர) வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் சுயேச்சையாக போட்டியிட விரும்பிய சிலர் விண்ணப்ப மனுக்களை வாங்கியதோடு, வேட்பு மனு தாக்கலின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கேட்டு தெரிந்து கொண்டு சென்றனர்.

Next Story