நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி


நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 9:34 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் செம்மையாக நடைபெறுவதையொட்டி திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 150 போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியில் காவல்துறை அலுவலர்களின் அனைத்து நிலைகளில் பணியாற்றும் பணியாளர்களும் தங்களது வாக்கினை தவறாது பதிவு செய்ய ஏதுவாக தபால் ஓட்டு முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது. போலீசார் எளிதாக வாக்களிக்க உரிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமாக அளிக்கும் புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து 100 நிமிடங்களுக்குள் நிவர்த்தி செய்யும் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்திற்கான முன்அனுமதி பெறுவதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் சுவிதா செயலியினை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியில் தேர்தல் நடைமுறைகள், தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்தும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், அம்பத்தூர் போலீஸ் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story