ஈரோடு ஓட்டலில் தகராறு: மினிபஸ் டிரைவர்கள் –கண்டக்டர்கள் 4 பேர் கைது
ஈரோடு ஓட்டலில் தகராறு செய்த மினிபஸ் டிரைவர்கள்–கண்டக்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நாமக்கல் மாவட்டம் எடப்பாடி அருகே நங்கவள்ளியை சேர்ந்த மினிபஸ் டிரைவரான சங்கர் (வயது 29) என்பவர் நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது பரோட்டாவுக்கு வெங்காயம் கேட்டபோது, ஓட்டல் ஊழியர் வெங்காயம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டலின் மேலாளர் விஜய், டிரைவர் சங்கர் ஆகியோர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மினி பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் ஓட்டலின் முன்பு திரண்டனர். அவர்கள் விஜயை பயங்கரமாக தாக்கினார்கள். மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் மினிபஸ் டிரைவர்களான ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த தேவேந்திரன் (20), நாராயணவலசு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), கண்டக்டர்களான வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஹரிஹரன் (22), ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டல் மேலாளர் விஜய் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.