திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்


திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 19 March 2019 10:15 PM GMT (Updated: 19 March 2019 9:51 PM GMT)

திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

திருவாரூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்படி திருவாரூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளும், நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளும் இடம் பெற்று உள்ளன. நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல்

நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான முருகதாசிடம், கூத்தாநல்லூர் அதங்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(வயது 54) என்பவர் திருவாரூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

நாகை பாராளுமன்ற தொகுதிக்கு நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 5 பேர் வேட்பு மனு விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.

Next Story