சம்பள பாக்கியை வழங்கக்கோரி சுதேசி, பாரதி மில் ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
சம்பள பாக்கியை வழங்கக்கோரி சுதேசி, பாரதி மில் ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவை சுதேசி, பாரதி மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8 மாதம் சம்பள பாக்கி உள்ளது. மேலும் போனசும் வழங்கப்படவில்லை. இதனால் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சம்பள பாக்கி, போனஸ் உள்ளிட்டவற்றை வழங்கக்கோரி தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது. சுதேசி மில் வாசலில் தொழிலாளர்கள் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சினார்கள். மில் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு வங்கியில் தனிநபர் கடன் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பளம் வழங்கப்படாததால் வங்கி நிர்வாகமும் கடன் மற்றும் வட்டித்தொகையை செலுத்தக்கோரி தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதனால் சம்பளம் இல்லாமலும், வங்கி நிர்வாகம் கொடுக்கும் தொல்லையாலும் மனஉளைச்சல் அடைந்துள்ளதாகவும், இதை கவனத்தில் கொண்டு கவர்னர் மற்றும் முதல்–அமைச்சர் ஆகியோர் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர்.