ஸ்ரீவைகுண்டத்தில், வாகன சோதனையில் ரூ.3½ லட்சம் பறிமுதல்
ஸ்ரீவைகுண்டத்தில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் நாகசுப்பிரமணி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகள், ஒரு லோடு ஆட்டோவை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனங்களில் மொத்தம் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 700-யை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் விசாரணையில், ஏரல் வாரச்சந்தையில் வியாபாரம் முடிந்ததும், இரவில் காய்கறி வியாபாரிகள் பணத்துடன் வீட்டுக்கு திரும்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த பணம், ஸ்ரீவைகுண்டம் கிளை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை திரும்ப பெற்று கொள்ளுமாறு வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story