நள்ளிரவில் தனியாக வந்த இலங்கை அகதி சிறுமி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு


நள்ளிரவில் தனியாக வந்த இலங்கை அகதி சிறுமி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 March 2019 10:29 PM GMT (Updated: 19 March 2019 10:29 PM GMT)

இலங்கை அகதி சிறுமி நள்ளிரவில் தனியாக வந்த போது மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ராமநாதபுரம்,

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகளாக தமிழகம் வந்து முதலில் மண்டபம் முகாமிலும், பின்னர் சிவகாசி அனுப்பங்குளம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமிலும் தங்கி உள்ளனர். இந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்கி தமிழ் முதல்தாள், 2–ம் தாள் முடிந்துள்ள நிலையில் வீட்டிற்கு வந்த அவரை தேர்வு தொடர்பாக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தங்களின் உறவினர்கள் தங்கியுள்ள மண்டபம் முகாமிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்காக வீட்டில் தான்சேர்த்து வைத்த உண்டியல் பணம் ரூ.300–ஐ எடுத்துக்கொண்டு ராமநாதபுரம் வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வந்த அவர் பஸ் நிலையத்தில் மண்டபம் முகாம் செல்ல வழி கேட்டுள்ளார்.

அப்போது ரோந்து பணியில் இருந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி சிறுமியை பிடித்து விசாரித்துள்ளார். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடனடியாக அவரை வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். இதுபற்றி தகவல் அறிந்த சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், குழந்தைகள் நல குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்டோர் நள்ளிரவில் சிறுமியை பத்திரமாக அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் இதுபற்றி அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாலையிலேயே அவர் வந்து தனது மகளை மீட்டு சென்றார். உரிய அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டார். இன்று (புதன்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடைபெற உள்ளதால் உடனுக்குடன் அனைவரும் விரைந்து செயல்பட்டு சிறுமியை அனுப்பி வைத்தனர்.


Next Story