தேர்தல் விதிமுறை மீறல் அ.ம.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மீது வழக்கு


தேர்தல் விதிமுறை மீறல் அ.ம.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 March 2019 4:30 AM IST (Updated: 20 March 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக அ.ம.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான வீரராகவராவ் தலைமையில் பறக்கும்படையினர் தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்களை தீவிரமாக கண்காணித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கட்சியின் சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளராக நவாஸ்கனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.ம.மு.க வேட்பாளராக மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று ராமநாதபுரம் வந்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அவர்களும், அவர்களின் உடன் வந்தவர்களும் ஏராளமான வாகனங்களில் கட்சி கொடி கட்டி வந்ததாகவும் இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதோடு, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் ஆர்.எஸ்.மடை கிராம நிர்வாக அதிகாரி மாயாண்டி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் அ.ம.மு.க வேட்பாளர் வது.ந. ஆனந்த், ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், நகர் செயலாளர் ரஞ்சித்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளரும். சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் முத்தையா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல, தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி மற்றும், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத்குமார், நகர் செயலாளர் கார்மேகம், மாநில கவுன்சில் உறுப்பினர் ராஜா உள்பட பலர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story