தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவன் கைது - தாதரில் பரபரப்பு


தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவன் கைது - தாதரில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2019 4:10 AM IST (Updated: 20 March 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

தாதரில் தன்னை திட்டிய பெண்ணின் குழந்தையை கடத்திய 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை தாதர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 1½ வயது மகன் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தான். திடீரென அவன் காணாமல் போனான். இதனால் கலக்கம் அடைந்த சிறுவனின் தாய் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன அந்த பெண் சிவாஜிபார்க் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டனர்.

இதில், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் பெண்ணின் மகனை தாதர் ரெயில் நிலையத்துக்கு தூக்கிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, அவன் அந்த சிறுவனுடன் கல்யாண் சென்ற ரெயிலில் ஏறியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கல்யாண் விரைந்தனர். ஆனால் அங்கிருந்து அவன் நவிமும்பை கன்சோலிக்கு சென்றது தெரியவந்தது. எனவே சிறுவனை பிடிப்பதற்காக கன்சோலி போலீசாரை உஷார்படுத்தினர். ஆனால் அவனை அங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில், தானே கல்வா பகுதியில் சிறுவன் ஒருவன் அழுதுக்கொண்டு இருப்பதாக கல்வா போலீசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு சென்று அந்த சிறுவனை மீட்டனர். விசாரணையில், அவன் தாதரில் கடத்தப்பட்ட 1½ வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதுபற்றி கல்வா போலீசார் சிவாஜிபார்க் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் சிறுவனின் தாயுடன் அங்கு சென்றனர். அங்கு போலீசார் சிறுவனை அவனது தாயிடம் ஒப்படைத்தனர். அவன் கடத்தப்பட்டு 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அவனை கடத்திய சிறுவன் தாதருக்கு வந்தான். அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், சிறுவனின் தாய் அவனுடன் நான் விளையாடுவது பிடிக்காமல் தன்னை திட்டினார். எனவே அப்பெண்ணை பழிவாங்குவதற்காக அவரது மகனை கடத்திச்சென்றதாகவும், இறுதியில் கல்வா பகுதியில் தவிக்கவிட்டு விட்டு வந்ததாகவும் கூறினான்.

தன்னை திட்டிய பெண்ணை பழிவாங்குவதற்காக அவரது மகனை 13 வயது சிறுவன் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story