ஓய்வு பெற்ற நர்சு கொலை, கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளிகளின் உருவங்கள் - போலீசார் தீவிர விசாரணை


ஓய்வு பெற்ற நர்சு கொலை, கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளிகளின் உருவங்கள் - போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 6:15 PM GMT)

கோவையில் ஓய்வு பெற்ற நர்சு கொலை வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளிகளின் உருவங்களை வைத்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிங்காநல்லூர்,

கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன் (வயது 83). இவருடைய மனைவி மேரி ஏஞ்சலின் (70). இவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 9 ஆண்டுகளாக வசித்து வநதார்.

இவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு கேட்டு கடந்த 18-ந் தேதி இரவு கணவன்-மனைவி என்று கூறிக்கொண்டு 2 பேர் வந்தனர். அவர்கள் வீட்டை பார்ப்பது போல் உள்ளே நுழைந்து மேரி ஏஞ்சலின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் விஜய் ஆனந்தனின் வீடு அருகில் உள்ள வீடுகள், அந்த தெருவில் பொ ருத்தப்பட்டிருந்த 10 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் கணவன்- மனைவி போல் வந்த கொலையாளிகளின் உருவங்கள் தெளிவாக பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியில் வசித்து வருகிறார்களா? அவர்களை வேறு எங்காவது யாராவது பார்த்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலையாளிகளின் உருவப்படங்களை கோவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கண்காணிப்பு கேமரா மூலம் கொலையாளிகளின் அடையாளம் தெரிந்துள்ளது. ஆனால் அவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. இருந்தபோதிலும் கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம்’ என்றார். மேலும் விஜய் ஆனந்தனின் உறவினர்கள் 30 பேரிடமும் விசாரணை நடத்தப் பட்டது.

Next Story